சுடச்சுட

  

  பொதுத் துறை வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 05th April 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farmer

  தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தமிழக விவசாயிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு அளித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிர்வாகிகள்.

  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.
  கூட்டுறவுச் சங்கங்கள் அளித்துள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது குறித்து தில்லி ஜந்தர் மந்தரில் 22-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி வரும் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம். இதுபோல, தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று முக்கிய கோரிக்கைள் பலவற்றை நாங்கள் முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம். அவை நிறைவேறும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
  20 ஏக்கர் நிலம் வைத்துள்ள நானும் நான்கு ஏக்கரில் விவசாயம் செய்வதற்கு வங்கியில் இருந்து கடன் பெற்றேன். அதைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி எனக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஆனால், பெரு விவசாயி என்ற முறையில் அந்தக் கடன் தள்ளுபடியை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயக் கடன்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுத்தேன்.
  இந்த விஷயத்தில் பதில் அளிக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்திய நிலையில், தற்போதைய உயர் நீதிமன்ற உத்தரவு ஆறுதலாக உள்ளது. 'ஆடி' கார் வைத்துள்ளதாகவும் 100 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் என்னைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி சிலர் சமூக ஊடகங்களில் களங்கப்படுத்தி வருகிறார்கள் என்றார் அய்யாக்கண்ணு.
  முன்னதாக, 22-ஆம் நாள் போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தர் சாலையில் சில விவசாயிகள் தலைகீழாக நின்று வழிப்போக்கர்களை ஈர்த்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தமிழகக் கிளையைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் தில்லிக்கு நேரில் வந்து விவசாயிகளைப் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai