சுடச்சுட

  

  மக்கள் வரிப் பணத்தை தனிப்பட்ட வழக்கிற்காக பயன்படுத்துவதா? கேஜரிவாலுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம்

  By DIN  |   Published on : 05th April 2017 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kejriwal

  தன் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட வழக்கிற்காக மக்களின் வரிப் பணத்தை தில்லி முதல்வர் கேஜரிவால் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், கிரண் ரிஜிஜு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
  இதையடுத்து, அவருக்கு எதிராக அமைச்சர் அருண் ஜேட்லி நீதிமன்றத்தில் குற்ற அவதூறு வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கேஜரிவாலுக்கு ஆதரவாக பிரபல வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். இதற்காக ஜேத்மலானிக்கு கட்டணமாக ரூ.3.40 கோடியை வழங்குமாறு தலைமை நிர்வாகத் துறைக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரின் கருத்தை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  அமைச்சர்கள் கண்டனம்: இந்நிலையில், கேஜரிவாலின் வழக்குச் செலவுக்கு அரசின் பணத்தை செலவிடும் நடவடிக்கைக்கு மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜாவடேகர் கூறியதாவது:
  முதல்வர் கேஜரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்புடைய வழக்குரைஞருக்கு கட்டணத் தொகையை வழங்க அனுமதி அளிக்கும் தில்லி அரசின் நடவடிக்கையானது மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் செயல் போன்றதாகும். அவரது தனிப்பட்ட வழக்கிற்கு அரசுப் பணத்தை வழங்கும் முடிவு அரசு விதிகள், சட்டத்திற்கு எதிரானதாகும். இது சட்ட விரோதமானதுமாகும். கேஜரிவால் செய்த பாவத்திற்கு தில்லி மக்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? இதை ஏற்க முடியாது. மேலும், கேஜரிவாலுக்கு எதிராக ஏழு அவதூறு வழக்குகள் உள்ளன. அவற்றுக்குரிய தொகையை செலுத்துமாறு கேஜரிவால் கேட்டுக் கொள்ளப்பட்டால் தில்லி அரசு ரூ.100 கோடி செலுத்துமா?
  தில்லி முதல்வர் என்பதால்தான் கேஜரிவாலுக்கு எதிரான வழக்குக்காக ஆஜராகும் வழக்குரைஞருக்கு அரசு கட்டணம் வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், தனிப்பட்ட அவதூறு வழக்குதான் கேஜரிவாலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
  மத்திய உள் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், 'தன் மீதான தனிப்பட்ட வழக்குக்கு அரசுப் பணத்தை செலவிடும் நபர் கேஜரிவாலாகத்தான் இருப்பார். இதுபோன்று எந்த முதல்வரும் இருந்ததில்லை. அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்பாக பேசிய கருத்து மீது தொடக்கப்பட்ட வழக்கு கேஜரிவாலின் தனிப்பட்டதாகும். அதற்கான கட்டணத்தை மக்கள் எப்படிச் செலவிட முடியும்? தன்னைப் பாதுகாக்கவும், விளம்பரப்படுத்தவும் மக்கள் வரிப் பணத்தை கேஜரிவால் செலவு செய்து வருகிறார்' என்றார்.
  மணீஷ் சிசோடியா கருத்து: இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், 'இது கேஜரிவாலின் தனிப்பட்ட முறையிலான வழக்கு அல்ல. தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக தில்லி அரசு உத்தரவின்பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. இதனால்தான் முதல்வர் கேஜரிவால் மீது அருண் ஜேட்லி வழக்குத் தொடுத்தார். அதனால், ஜேட்லியின் வழக்கை எதிர்த்து தில்லி அரசே வாதிடும்' என்றார்.
  'இலவசமாக வாதாடுவேன்'
  இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி கூறுகையில், 'கேஜரிவால் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்காக வாதிடும் எனக்கு கேஜரிவால் பணம் கொடுக்க முடியாவிட்டாலும் இலவசமாக வாதிடுவேன். எனது கட்டணத்தை அளிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறார். இந்த விஷயத்தில் முதல்வர் கேஜரிவாலை ஆதரிப்பது அரசின் கடமையாகும். கேஜரிவால் கூறியதன் பேரில்தான் எனது சேவைக்கான கட்டண ரசீதை அனுப்பிவைத்தேன். அத்தொகையை அரசு செலுத்தாவிட்டாலும் கூட கேஜரிவாலுக்காக இலவசமாக வாதிடுவேன் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai