சுடச்சுட

  

  மதுபானக் கடைகள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விரும்பாத மாநிலங்கள்

  By DIN  |   Published on : 05th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் மதுபானக் கடைகள் நடத்துவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்த சில மாநில அரசுகள் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
  நெடுஞ்சாலைகளில் நேரிடும் விபத்துகளுக்கு வாகனங்களை ஓட்டுநர்கள் போதையில் ஓட்டுவதே காரணம் என்பதை சுட்டிக்காட்டி, தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் 220 மீட்டர் சுற்றளவில் மதுபானக் கடைகள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31-ஆம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் இருக்கும் மதுபானக் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசுகள் உள்ளன.
  இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன. இதையடுத்து, நெடுஞ்சாலைகள் என்று வரையறுக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவது, சில விதிவிலக்குகளை அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்து மாநில அரசுகள் யோதித்து வருகின்றன.
  இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  மதுபானக் கடைகள் மூடப்படுவதால் வருமானம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, சில மாநிலங்களிடம் இருந்து, தேசிய நெடுஞ்சாலைகள் என்று வரையறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கைகள் வந்துள்ளன. டாமன் யூனியன் பிரதேசத்திடம் இருந்து எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வந்துள்ளது. பஞ்சாப், தெலங்கானா, கேரளம், கோவா, ஹரியாணா ஆகிய மாநிலங்களும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளன. ஆனால் அவை எழுத்துப் பூர்வமாக கோரிக்கை விடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உச்ச நீதிமன்றத்தை அணுகி தங்களது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். கேரள அரசும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கேட்பது குறித்து யோசித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருக்கும் கலால் கொள்கை குறித்து படித்தறிவதற்கு 11 பேர் குழுவை சத்தீஸ்கர் அரசு அமைத்துள்ளது. ராஜஸ்தானில் சில நெடுஞ்சாலைகள் சாதாரண சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
  இதனிடையே, நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட காரணமாக இருந்த சண்டீகரைச் சேர்ந்த ஹர்மன் சித்து, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai