சுடச்சுட

  

  'மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற சட்டத் திருத்தம் அவசியமில்லை'

  By DIN  |   Published on : 05th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் தற்போது நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதற்கு சட்டத் திருத்தம் எதுவும் அவசியமில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்புள்ளதால், இனிவரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன.
  மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவதற்கு, சட்டத் திருத்தம் எதுவும் மேற்கொள்வது அவசியமா? என்ற கேள்விக்கு பதிலளித்து, தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது:
  தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951இல் கடந்த 1988-ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  அதன்படி, தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சீட்டுகள் ஆகிய இரண்டையுமே பயன்படுத்த முடியும். எனவே, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்துவதற்கு சட்டத் திருத்தம் எதுவும் அவசியமில்லை.
  தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதா? அல்லது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதா? என்பது குறித்து முடிவெடுப்பது தேர்தல் ஆணையத்தின் தனியுரிமையாகும்.
  எனினும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்துவதே, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிமுறை என்று நாங்கள் கருதுகிறோம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வது விரைவாகவும், மிக வசதியாகவும் இருக்கிறது.
  கடந்த 2009-ஆம் ஆண்டில் செய்ததை போல, அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளதா? என்பதை நிரூபித்து காட்டும்படி கூறுவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  முன்னதாக, இனிவரும் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
  வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறுவதை விடுத்து, அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கக் கூடிய முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று அக்கட்சி கூறியது.
  இதேபோல, தில்லியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் வலியுறுத்தி வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai