சுடச்சுட

  

  முத்தலாக் அனுப்பிய கணவருக்கு எதிராக நடவடிக்கை: உ.பி. முதல்வருக்கு முஸ்லிம் பெண் கடிதம்

  By DIN  |   Published on : 05th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் கடிதம் எழுதியுள்ளார்.
  இதுதொடர்பாக அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கான்பூர் நகரில் கணினி மையம் நடத்தி வரும் பெண் நான். எனக்கு கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
  திருமணத்துக்கு வரதட்சிணையாக கார், நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம், மேலும் சில பொருள்கள் அளிக்கப்பட்டன.
  திருமணம் முடிந்த மறுநாள் எனது கணவர் வீட்டுக்குச் சென்றபோது அவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து மனைவி இருப்பது தெரியவந்தது.
  என்னை ஏமாற்றியதற்காக நான் ஆட்சேபம் தெரிவித்தபோது கணவரின் பெற்றோரால் தாக்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், வரதட்சிணையாக அளித்த காருக்கு பதிலாக மற்றொரு காரை வாங்கித் தருமாறு அவர்கள் நிபந்தனை விதித்தனர்.
  சில தினங்களுக்குப் பிறகு நான் எனது பெற்றோர் இல்லத்துக்கு திரும்பி விட்டேன். கடந்த ஜனவரி மாதம் எனக்கு பதிவுத் தபால் வந்தது. அதில், மூன்று முறை தலாக் கூறி என்னை விவாகரத்து செய்வதாக எனது கணவர் குறிப்பிட்டிருந்தார்.
  மாநில தொழிலாளர் துறையில் எனது கணவர் பணிபுரிந்து வருகிறார். எனவே, அவருக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதே கடிதத்தை அந்த மாநில ஆளுநர் ராம் நாயக்குக்கும், மாநில தொழிலாளர் நலத் துறைக்கு அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.
  நாடு முழுவதும் முத்தலாக் முறைக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. சில பெண் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த பெண்களும் முத்தலாக் முறையை நீக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai