Enable Javscript for better performance
அருணாசலில் தலாய் லாமா: இந்தியாவுடனான உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்: சீனா எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலில் தலாய் லாமா: இந்தியாவுடனான உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்: சீனா எச்சரிக்கை

    By DIN  |   Published on : 06th April 2017 04:56 AM  |   அ+அ அ-   |    |  

    talailama

    அருணாசலப் பிரதேச மாநிலம், போம்திலா நகரில் உள்ள பௌத்த மடாலயத்தில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா.

    திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியத் தூதரிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக சீனா புதன்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரித்துள்ளது.
    முன்னதாக, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்வதை அனுமதிக்கக் கூடாது என்ற சீனாவின் எதிர்ப்புகளை புறந்தள்ளிய இந்தியா, அவரது பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
    அதன்படி, அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்திலுள்ள பொம்டிலா பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற தலாய் லாமா, அங்கிருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
    இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மேலும் எரிச்சலடைந்துள்ள சீனா, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதர் விஜய் கோகலேவிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
    இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனியிங் புதன்கிழமை கூறியதாவது:
    இந்திய-சீன எல்லையில் சர்ச்சைக்குரிய கிழக்குப் பகுதிகளில் தலாய் லாமா சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம் சீனாவின் பிராந்திய இறையாண்மை குறித்த கவலைகளை இந்தியா வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை, சீனா கடுமையாக எதிர்க்கிறது. இதுதொடர்பாக, இந்தியத் தரப்பிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
    இரு நாட்டு எல்லையில் சர்ச்சைக்குரிய கிழக்குப் பகுதிகளில், சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.
    நடவடிக்கை மேற்கொள்வோம்: எங்களது பிராந்திய இறையாண்மையையும், உரிமைகளையும் காப்பதற்காக தேவையான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தலாய் லாமாவை பயன்படுத்தி, சீனாவின் உரிமைகளை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டாம். அது, இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயன் தராது. மாறாக, இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    எனவே, இரு தரப்பு உறவுகளையும் காப்பதற்கான நடவடிக்கையை, இந்தியா உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    முன்னதாக, தலாய் லாமாவின் அருணாசல் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இந்திய உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
    அவர் மேலும் கூறுகையில், 'சீனாவின் ஒருமைப்பாட்டை இந்தியா மதிக்கிறது. தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேச பயணம், முழுக்க முழுக்க ஆன்மிகம் தொடர்புடையது. அதில் எந்த அரசியலும் இல்லை' என்றார்.
    அவரது இந்தக் கருத்துகளை நிராகரித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனியிங், 'எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடும் கொள்கை, சீனாவுக்கு கிடையாது. ஆனால், தற்போதைய பிரச்னை, உள்நாட்டு விவகாரங்களையும் தாண்டியது' என்றார்.

     

     

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp