சுடச்சுட

  

  இந்தியா-பாகிஸ்தான் விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

  By DIN  |   Published on : 06th April 2017 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு இருதரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தின்படி பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீடு கூடாது.
  நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி மாறவில்லை.
  இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்டு இருக்கும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். அதேநேரத்தில், எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.
  பாகிஸ்தானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்சியிலும், அந்நாட்டின் மீது ஐ.நா. சபை மூலம் தடைகள் விதிக்கும் முயற்சியிலும் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனையாகும்.
  காஷ்மீர் நிலவரம் கடந்த 10 ஆண்டுகளில் தற்போதுதான் மிகவும் மோசமாக உள்ளது. எனவே காஷ்மீரில் சகஜ நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அஜய் குமார் கூறினார்.
  முன்னதாக, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தார். எனினும், இந்த அறிவிப்பை இந்திய அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியபோது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்னைகளுக்கும், பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai