சுடச்சுட

  

  இறைச்சிக் கூட உரிமங்கள் விவகாரம்: உ.பி. அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

  By DIN  |   Published on : 06th April 2017 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இறைச்சிக் கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசு 10 நாள்களில் முடிவெடுக்க வேண்டுமென்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
  உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு அந்த மாநிலத்தில் உரிமம் பெறாத இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே பல இறைச்சிக் கூடங்களின் உரிமங்களை உத்தரப் பிரதேச அரசு புதுப்பிக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  பாஜக அரசு தங்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி இறைச்சிக் கூட உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இறைச்சிக் கூட உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்துப் பேசியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
  இந்நிலையில், இறைச்சிக் கூட உரிமையாளர்கள் சார்பில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில், 'எங்களது இறைச்சிக் கூடத்தின் உரிமத்தை புதுப்பித்துத் தர உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும்; ஏனெனில், அரசின் தாமதத்தால் நாங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியவில்லை' என்று கூறப்பட்டிருந்தது.
  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
  எந்த உணவை சாப்பிடுவது என்பதும், உணவுப் பொருள் விற்பனையும் அடிப்படை வாழ்வுரிமைகளில் ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் பல தரப்பட்ட உணவுப் பழக்கங்கள் உள்ளன. மாநிலத்தின் மதச்சார்பின்மையில் இதுவும் ஒரு பகுதி.
  சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் சட்டப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு சாப்பிடுவதும், உணவு விற்பனையும் வாழ்வாதாரப் பிரச்னை. மக்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரமாகக் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே, சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசு 10 நாளில் செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்றார்.
  மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர் தீரஜ், 'சட்டவிரோத இறைச்சிக் கூட விவகாரங்கள் குறித்து விவாதிக்க மாநில அரசின் தலைமைச் செயலர் தலைமையில் விரைவில் கூட்டம் நடைபெறவுள்ளது' என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai