சுடச்சுட

  

  கர்நாடக அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு விவகாரம்

  By DIN  |   Published on : 06th April 2017 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supremecourt

  சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை எவ்வாறு வசூலிப்பது என்பதை தீர்ப்பில் தெளிவுபடுத்தவில்லை எனக் கூறி கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
  இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகள் அறையில் புதன்கிழமை பரிசீலித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:
  சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவைப் பரிசீலித்தோம். இந்த மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான ஜெயலலிதா, விசாரணை நடைபெறும் காலத்தில் உயிரிழந்து விட்டதால் அவருக்கான தண்டனை நீக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுவதால் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  தீர்ப்பு என்ன?: வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2014, செப்டம்பர் 27-இல் தீர்ப்பு அளித்தது.
  தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் அத்தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  அபராதம் வசூல் எப்படி?: குற்றம்சாட்டப்பட்டோருக்குரிய அபராதத் தொகையை அவர்களின் வங்கி நிரந்தர முதலீடுகள், ரொக்கம் ஆகியவற்றில் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் அபராதத் தொகை வசூலாகாவிட்டால், புலனாய்வு அமைப்பால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டோருடைய தங்கம், வைர நகைகளை பாரத ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி அல்லது பொது ஏலத்தில் விட்டு அபராதத்தை ஈடு செய்ய வேண்டும். வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மென்ட்ஸ்; மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ்; ராமராஜ் அக்ரோ மில்ஸ்; சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பதிவாகியுள்ள 71 அசையாச் சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். மொத்த அபராத வசூல் தொகையில் ரூ.5 கோடியை வழக்குச் செலவினமாக கர்நாடக அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றம் கூறியது.
  மேல்முறையீடு: இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டோர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் அனைவரையும் வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம், 2015, மே 11-ஆம் தேதி விடுதலை செய்தது. இதையடுத்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  இந்த வழக்கில் தனி நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் கூறியிருப்பதாவது: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவருக்கு தனி நீதிமன்றம் அளித்த தண்டனை, அபராதம் உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும்.
  குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா, மற்ற மூவருடன் சேர்ந்து குற்றம் இழைத்திருந்ததை தகுந்த ஆதாரத்துடன் தனி நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்த காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்து விட்டார். அதனால், அவர் தொடர்புடைய மேல்முறையீடு முடிவுக்கு வந்த விவகாரமாகக் கருதப்படுகிறது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது.
  மறுஆய்வு மனு: இந்நிலையில், ஜெயலலிதாவிடம் ரூ.100 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் என தனி நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்ட தொகையை எப்படி வசூலிப்பது என தெளிவுபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், ஜெயலலிதாவின் தண்டனை தொடர்புடைய மேல்முறையீட்டை, அவர் உயிரிழந்ததைக் காரணம் காட்டி நீதிமன்றம் முடித்துக் கொண்டுள்ளதால், அவருக்கான அபராதம் குறித்து தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை. இந்த அடிப்படையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai