சுடச்சுட

  

  காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக ஃபரூக் அப்துல்லா கருத்து

  By DIN  |   Published on : 06th April 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farook

  ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு வேண்டி, தங்களது வாழ்வையே அவர்கள் பணயம் வைப்பதாக ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
  முன்னதாக காஷ்மீரில் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், பயங்கரவாதத்துக்கு (டெரரிஸம்) பதிலாக சுற்றுலாவை (டூரிஸம்) தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளுக்காக பல இளைஞர்கள் கல் உடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலர் கல்லெறிந்து கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.
  இந்நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர், ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:
  காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் (கல்லெறிந்து போராட்டத்தில் ஈடுபடுவோர்) தங்களது வாழ்வையே பணயம் வைக்கின்றனர். மாறாக, சுற்றுலாவுக்காக அவர்கள் போராடவில்லை. இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
  ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
  மத்திய அமைச்சர் பதிலடி: இந்நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாதிகளைப் போன்று ஃபரூக் அப்துல்லா பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து தில்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
  அப்துல்லா வம்சாவளியில் வந்த ஃபரூக், தற்போது அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாதிகளைப் போல பேசி வருகிறார். இதுபோன்று பேச வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai