சுடச்சுட

  

  கில்கித் - பால்டிஸ்தான் இந்தியாவுக்கே சொந்தம்: மத்திய அரசு திட்டவட்டம்

  By DIN  |   Published on : 06th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் - பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
  கில்கித் - பால்டிஸ்தானை பாகிஸ்தானின் புதிய மாகாணமாக அந்நாடு அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கில்கித் - பால்டிஸ்தான்.
  1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது. சுமார் 72,971 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில், 19 லட்சம் பேர் வசிப்பதாக 2008-ஆம் ஆண்டு மக்கள் தொகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  7 மாவட்டங்கள், 33 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதி, இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.
  இந்நிலையில், அந்தப் பகுதியை 5-ஆவது மாகாணமாக பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது.
  இந்த விவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது. பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த உறுப்பினர் பாரத்ருஹரி மஹதாப் இதுதொடர்பாக அவையில் பேசியதாவது: கில்கித் - பால்டிஸ்தானை புதிய மாகாணமாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு இந்தியா ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? மேலை நாடுகள் கூட இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்புகின்றன. கடந்த கால வரலாற்றை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது என்றார்.
  இதற்குப் பதிலளிக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
  கில்கித் - பால்டிஸ்தான் தொடர்பாக பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்ட நாள் முதலே அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் - பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  இந்தப் பகுதிகளை மீட்பதற்காக பாஜக நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி, தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். எனவே, அந்தப் பகுதிகளை பாகிஸ்தானுக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது போலக் கூறப்படும் விமர்சனங்கள் தவறானவை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai