சுடச்சுட

  

  குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியவாழ் நபர்களை ஆஜர்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் நீடிப்பு: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ முறையீடு

  By DIN  |   Published on : 06th April 2017 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியவாழ் தொழிலதிபரும் மேக்சிஸ் நிறுவனத் தலைவருமான டி.அனந்தகிருஷ்ணன், அந்நிறுவன முன்னாள் இயக்குநர் ரால்ஃப் மார்ஷல் ஆகியோரை இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பல நடைமுறைச் சிக்கல்கள் நிலவுவதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.
  இது தொடர்பான வழக்கு விசாரணை தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகியோரை இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களுக்கு வழங்கப்படும் நீதிமன்ற அழைப்பாணையை சர்வதேச போலீஸ் அமைப்பான "இண்டர்போல்' மேற்கொள்ள வேண்டும்.
  இது தொடர்பாக இண்டர்போல் மூலம் அனுப்பி அழைப்பாணைகளை குற்றம்சாட்டப்பட்டோர் பெற்றுக் கொள்ளவில்லை. இண்டர்போல் அமைப்பிடம் இது குறித்து சிபிஐ முன்வைத்துள்ள கோரிக்கை நிலுவையில் உள்ளது.
  இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் இந்த வழக்கில் உள்ளது' என்று முறையிட்டார். இதையடுத்து, சிறப்பு நீதிபதி சைனி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
  பின்னணி: ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல், அவர்கள் தொடர்புடைய மலேசியாவில் உள்ள தொழில் நிறுவனங்களான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க், மேக்சிஸ் கம்யூனிகேஷன் ஆகியவற்றின் தரப்பில் அவற்றின் பிரதிநிதிகள் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உத்தரவிடப்பட்டது.
  இதே வழக்கில் தொடர்புடையதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீதான சிபிஐ குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விடுவித்தது.
  இருப்பினும், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்ற விவகாரத்தில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளதால், அதை சிபிஐ நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai