சுடச்சுட

    

    குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 06th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை 4 வார காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மாநிலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் நிச்சயம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து மாநில அரசுகள் கூறும்போது, நாடாளுமன்றம் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், ஆனால் நாங்கள் எங்களது விருப்பப்படிதான் செயல்படுவோம் என்கின்றன. இதுதான் ஒரு நாட்டை ஆளும் வழிமுறையா?
    அரசியல் சாசனப்படி, குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    ஆனால் அந்த சங்கங்களில் யார் உறுப்பினராக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இது மிகவும் தீவிர பிரச்னையாகும். சில மாநிலங்கள், அந்தச் சங்கங்களில் இருக்கும் தலைவர் அல்லது உறுப்பினர்கள் பெயரை கூட மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த சங்கம் செயல்படவில்லை என்ற அனுமானத்துக்கு வர முடிகிறது.
    குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக மாநில அரசுகள் நிரப்ப வேண்டும்.
    இந்த உத்தரவை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
    இதனிடையே, மத்திய அரசின் சார்பில் துணைத் தலைமை வழக்குரைஞர் பி.எஸ். பத்வாலியா ஆஜராகி வாதாடுகையில், 'பல்வேறு மாநிலங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது; எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பிறகும் மாநில அரசுகள் செயல்படுத்தாத பட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும்' என்றார்.
    இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, தங்களது உத்தரவை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு 4 வார காலம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதன்பிறகும் உத்தரவை செயல்படுத்தவில்லையெனில், அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai