சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு புகார்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

  By DIN  |   Published on : 06th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜகவுக்குச் சாதகமாக வாக்குகள் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறி, காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை புதன்கிழமை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
  மாநிலங்களவை புதன்கிழமை காலை கூடியதும், அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஆகியவற்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.
  இதே கோரிக்கையை, சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், நரேஷ் அகர்வால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அதே கட்சியைச் சேர்ந்த சதீஷ் மிஸ்ரா ஆகியோர் வலியுறுத்தினர்.
  மாயாவதி பேசும்போது, ''உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; இது ஒரு மோசடி அரசு'' என்று குற்றம் சாட்டினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டதால், மாயாவதியின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறினார்.
  நாடாளுமன்ற விதி எண் 267-இன்படி, நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சமாஜவாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர். அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையமே தெளிவுபடுத்தி விட்டதே என்று பி.ஜே.குரியன் கூறினார்.
  அப்போது, ''ஒரு வீட்டை கொள்ளையடிக்கும்போது பிடிபடாமல் இருப்பதற்காக, குறிப்பிட்ட சில பொருள்களையே திருடர்கள் எடுத்துச் செல்வார்கள். அதுபோலவே, உத்தரப் பிரதேசத் சட்டப் பேரவைத் தேர்தலில்தான் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்றன'' என்று எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் குற்றம் சாட்டினார்.
  இதுதொடர்பாக, ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ''இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் அல்ல; தேர்தல் ஆணையத்திடம் முறையிடுங்கள்' என்று பி.ஜே.குரியன் கூறினார். உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல், அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டதால், அவையை சிறிது நேரம் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai