சுடச்சுட

  

  'வாட்ஸ் - அப்' விவகாரம்: அரசியல் சாசன அமர்வுக்கு மேல்முறையீட்டு மனு மாற்றம்

  By DIN  |   Published on : 06th April 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  'வாட்ஸ் - அப்' செயலியின் புதிய விதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வரும் 18-ஆம் தேதியன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த மனுவை விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  சர்வதேச அளவில் அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்ட இணையவழி குறுஞ்செய்தி பகிர்வு செயலியான 'வாட்ஸ் - அப்', புதிய தனிநபர் ரகசியக் கொள்கை (ப்ரைவஸி பாலிஸி) ஒன்றை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி, 'வாட்ஸ் - அப்' பயன்பாட்டாளர்களின் செல்லிடப்பேசி எண்கள், அவர்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசியின் வகை, அவற்றில் இடம்பெற்றுள்ள செயல்பாட்டு முறை (ஆபரேடிங் சிஸ்டம்) ஆகியவை தொடர்பான தகவல்களை, தனது தாய் நிறுவனமான முகநூலில் இணைக்க முடிவு செய்தது.
  இதன் மூலம் 'வாட்ஸ் - அப்' பயன்பாட்டாளர்கள் முகநூல் பக்கத்தைப் பயன்படுத்தும்போது, அவர்களுக்குப் பொருத்தமான சலுகைகள், விளம்பரங்களை தனித்தனியே வழங்க முடியும் என்று அந்நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
  இந்த நடவடிக்கையால் 'வாட்ஸ் - அப்' பயன்பாட்டாளர்களின் ரகசியம் காக்கும் உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
  இதுதொடர்பான பொதுநல மனுவொன்றை சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் 'வாட்ஸ் - அப்' புதிய தனிநபர் ரகசியக் கொள்கைக்கு அனுமதியளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேல் முறையீடு செய்தனர். இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை வரும் 18-ஆம் தேதி அந்த அமர்வு விசாரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai