சுடச்சுட

  

  400 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த ரயில்வே திட்டம்: சுரேஷ் பிரபு

  By DIN  |   Published on : 06th April 2017 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sureshprabu

  நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 400 ரயில் நிலையங்களை, அதிநவீன வசதிகளுடன் 'ஏ', 'ஏ-1' வகை ரயில் நிலையங்களாக தரம் உயர்த்துவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
  இதுதொடர்பாக, மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புதன்கிழமை கூறியதாவது:
  தில்லி உள்பட முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்களில் உள்ள 400 ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டத்தை தனியார் துறை பங்களிப்புடன் நிறைவேற்றுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
  இதில், விருப்பமுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த நிதியும், ரயில் நிலையங்களுக்கு அருகில் வர்த்தகப் பகுதிகளை உருவாக்கி, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் பெறப்படும்.
  இதுதவிர, 'ஆதர்ஷ்' ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், 1,253 ரயில் நிலையங்களை தரம் உயர்த்துவதற்கு ரயில்வே துறை கண்டறிந்துள்ளது. அவற்றில், 1,022 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன.
  சுயஉதவிக் குழுக்களுக்கு அனுமதி: ரயில்வே துறையின் இ-உணவக சேவைப் பிரிவுடன் இணைந்து, சுயஉதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை ரயில்களில் விற்பனை செய்வதற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது.
  சோதனை முயற்சியாக, ஏற்கெனவே, சுயஉதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை ரயில்களில் விற்பனை செய்து வருகின்றன.
  இதில், முக்கிய விஷயம் என்னவென்றால், ரயில்வே துறையின் இ-உணவக சேவைப் பிரிவினர் ஏற்றுக்கொள்ளும் வகையில், சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருள்களின் தரம் இருக்க வேண்டும்.
  5 கோடி மரக்கன்றுகள்: நாடு முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான பகுதிகளில், வரும் 2019-20-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
  இந்த மரக்கன்றுகளை நடுவதற்கும், பராமரிப்பதற்கும் மாநில வனத்துறைகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே ஹரியாணா, பஞ்சாப், அஸ்ஸாம், கர்நாடகம், மேற்கு வங்க மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துவிட்டன என்றார் சுரேஷ் பிரபு.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai