சுடச்சுட

  

  அயோத்தி வழக்கு: பாஜக தலைவர்களுக்கு எதிரான மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 07th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்களை விடுவிக்கும் அலாகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி, கரசேவகர்களால் கடந்த 1992-ஆம் ஆண்டில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட பலருக்கு எதிராக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
  இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டிலிருந்து எல்.கே. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்து. அந்த உத்தரவை அலாகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
  இந்தச் சூழலில், அத்வானி உள்ளிட்ட 10 பேரை சதிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்க்கும் மனுவை வியாழக்கிழமை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
  மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, ரே பரேலியில் நடைபெற்று வரும் வழக்குகளை, லக்னெள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளோடு இணைப்பது குறித்து இன்னும் இரு வாரங்கள் கழித்து விசாரித்து முடிவெடுக்கவிருப்பதாக நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக, லட்சக்கணக்கான - பெயர் தெரியாத கரசேவகர்களுக்கு எதிரான பல்வேறு வழக்குகள் ரே பரேலியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்திலும், சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியத் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் லக்னெள சிறப்பு அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai