சுடச்சுட

  

  இந்தியா - பாக். பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா. ஆலோசனை

  By DIN  |   Published on : 07th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தக் கருத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
  ஜம்மு - காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புப் பகுதிகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அண்மைக் காலமாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதுமட்டுமன்றி குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வீசியும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டு வந்தாலும், பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
  இதுதொடர்பாக ஐ.நா. சபையில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து எல்லையோர அத்துமீறல்களைக் கண்காணிக்க பிரத்யேகக் குழுக்களை ஐ.நா. அமைத்தது.
  அந்தக் குழுக்கள் பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தற்போது கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
  அதற்கு ஐ.நா. பொதுச் செயலாளரின் இணை செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ பதிலளித்ததாவது:
  எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக இந்தியத் தரப்பில் இருந்து தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அத்தகைய அத்துமீறல்கள் நடைபெறுகின்றனவா? என்பது குறித்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா. குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
  எது, எப்படியாயினும், அவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் தீர்வு. அதன் மூலமே இரு தரப்பிலும் அமைதியை நிலை நாட்ட முடியும் என்றார் அவர்.
  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க முயற்சி எடுக்கப் போவதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்ததும், ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்ததும் நினைவுகூரத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai