சுடச்சுட

    

    தலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சீனா தயங்கக் கூடாது: சீன ஊடகங்கள் கருத்து

    By DIN  |   Published on : 07th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திபெத் பெளத்த மதத் துறவி தலாய் லாமாவின் வருகையை அனுமதித்ததன் மூலம், மலிவான செயல்களில் இந்தியா ஈடுபட்டால், அந்நாட்டுக்கு சீன அரசு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, 9 நாள் பயணமாக தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் சென்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவில் இருந்து அரசு சார்பில் வெளியாகும் 'சீனா டெய்லி', 'குளோபல் டைம்ஸ்' ஆகிய நாளிதழ்கள், இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
    'சீனா டெய்லி' பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
    சீன எல்லைக்கு உள்பட்ட தெற்கு திபெத் பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, அதற்கு 'அருணாசலப் பிரதேசம்' என்று பெயரிட்டு இந்திய அரசு உரிமை கொண்டாடி வருகிறது.
    சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு தலாய் லாமாவுக்கு இந்திய அரசு அனுமதியளித்ததுடன், அவருடன் பாதுகாப்புக்காக, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் அனுப்பி வைத்துள்ளது. இது, சீனாவை இரு வழிகளில் அவமதிக்கும் செயலாகும்.
    எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா-சீனா இடையே பிரச்னை நீடித்து வந்தபோதிலும், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதி நீடித்து வருகிறது.
    எனினும், இந்தியா மலிவான செயல்களில் ஈடுபட்டால், 'அடிக்கு அடி' என்ற அடிப்படையில் பதிலடி கொடுக்க சீன அரசு தயங்கக் கூடாது என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதேபோல், ஆளும் சீன கம்யூனிஸ்ட் அரசின் பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சர்ச்சைக்குரிய பகுதிக்கு தலாய் லாமா பயணம் செய்திருக்கிறார். ஆனால், இந்த முறை அவரை இந்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றதுடன், அவரும் தலாய் லாமாவுடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக, சீன அரசு கவலை தெரிவித்தபோது, இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
    அண்மைக் காலமாக, இந்தியா-சீனா இடையேயான உறவு மேம்பட்டு வருவதுடன், எல்லைப் பகுதியில் அமைதியும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இந்திய அரசு சீர்குலைக்க விரும்பினால், இரு நாடுகளும் வெளிப்படையாக போட்டி நாடுகளாக மாறும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இந்தியாவால் தாங்கிக்கொள்ள முடியுமா?
    இந்தியாவை நட்பு நாடாகவும், கூட்டாளியாகவும் சீனா கருதுகிறது. அதற்கேற்ப இந்தியா செயல்பட வேண்டும்.
    அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு ஐ.நா. தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தது போன்ற விவகாரங்களால் சீனா மீது இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.
    இந்நிலையில், தலாய் லாமாவின் பயணத்தை அரசியல் ராஜதந்திரக் கருவியாகப் பயன்படுத்தி, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அரசு முயலுகிறது. இது ஒரு முதிர்ச்சியற்ற செயலாகும். இதனால், இந்தியா-சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சீனா குற்றச்சாட்டு: இதனிடையே, சர்ச்சைக்குரிய பகுதிக்கு தலாய் லாமா செல்வதற்கு அனுமதித்ததன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இந்திய அரசு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பதற்றத்தை உருவாக்கி விட்டது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யாங் குற்றம் சாட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai