சுடச்சுட

  

  பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் சாவு: மத்திய அரசு விசாரிக்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவு

  By DIN  |   Published on : 07th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
  மாநிலங்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்விநேரத்தின்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை காங்கிரஸ் உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி எழுப்பினார். அவர் கூறியதாவது:
  ராஜஸ்தானில் பசுக்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்த பசுப் பாதுகாவலர்கள், அந்த லாரி ஓட்டுநர் ஒரு ஹிந்து என்பதால், அவரை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நால்வரையும் கண்மூடித்தனமாக, இரக்கமின்றி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
  இதேபோன்ற சம்பவங்கள், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் என பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகின்றன என்றார் அவர். மிஸ்திரியின் கருத்தை மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரித்தனர்.
  சம்பவமே நடக்கவில்லை-நக்வி: ஆனால், அவரது குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மறுப்பு தெரிவித்தார்.
  ''மிஸ்திரி கூறியதைப் போல சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் மாநில அரசும் மறுத்துள்ளது. அதே நேரம், வன்முறைக் கலாசாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை'' என்று நக்வி கூறினார்.
  அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், ''அல்வர் சம்பவம் தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலேயே செய்தி வந்துவிட்டது. ஆனால், அது தொடர்பாக, அமைச்சர் நக்விக்கு ஏதும் தெரியாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபோன்ற ஒரு பொறுப்பற்ற அரசை நான் பார்த்ததில்லை'' என்றார்.
  அப்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த முயன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ''செய்தித்தாள்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் பேச முடியாது'' என்றார். அவர் மேலும் கூறியதாவது:
  இந்த சம்பவம் நடந்ததாகவும், நடக்கவில்லை என்றும் இரு வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, நடந்த உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக, இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் குரியன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai