சுடச்சுட

  

  ம.பி. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சர்ச்சை: மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

  By DIN  |   Published on : 07th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சோதனையின்போது பாஜகவுக்கு மட்டுமே வாக்குகள் பதிவானதாக எழுந்த சர்ச்சையில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளைப் பரப்புகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  மத்தியப் பிரதேசத்தில் வரும் 9-ஆம் தேதி இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  அண்மையில் நடைபெற்ற இதற்கான சோதனையின்போது, எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், பாஜகவுக்கு வாக்குச் செலுத்தியதாக ஒப்புகைச் சீட்டு வெளிவந்தததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் மக்களவையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி.கருணாகரன் அவையில் பேசியதாவது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இத்தகைய முறைகேடுகள் நிகழாத வண்ணம் மாற்றுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவது அவசியம் என்றார் அவர்.
  இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் பேசியதாவது:
  தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் பரப்பி வருகின்றன.
  அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பாஜக பெற்றிருக்கும் வரலாற்று வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கில் அக்கட்சிகள் இவ்வாறு செயல்படுகின்றன என்றார் அவர்.
  பயங்கரவாதப் பயிற்சி: இதனிடையே மியான்மரில் இருந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் 40,000 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களுக்குப் பயங்கரவாதப் பயிற்சியளிக்கப்படுவதாகவும் பிஜு ஜனதா தள எம்.பி. மஹதாப் மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்
  வலியறுத்தினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai