சுடச்சுட

  

  முதலையிடமிருந்து தோழியை காப்பாற்றிய 6 வயது சிறுமி: தேசிய விருதுக்குப் பரிந்துரை

  By DIN  |   Published on : 07th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒடிஸா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் முதலையிடமிருந்து தோழியைக் காப்பாற்றிய சிறுமிக்கு வீரதீரச் செயல்களுக்கான தேசிய விருதை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய உள்ளது.
  கேந்திரபாரா மாவட்டம், பான்குவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் அபய் தலாய், தினக் கூலித் தொழிலாளி. இவருடைய மகள் டிக்கி தலாய் (6). டிக்கி தனது தோழி வசந்தி தலாயுடன் சேர்ந்து, கிராமத்திலுள்ள குளத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் குளித்தார். அப்போது, அந்தக் குளத்தினுள் முதலை ஒன்று திடீரென நுழைந்தது. பின்னர், அது வசந்தியின் காலைக் கவ்வியது.
  இதை சற்றும் எதிர்பார்த்திராத டிக்கி, அருகிலிருந்த மூங்கில் கழியை எடுத்து முதலையின் தலையில் ஓங்கியடித்தார். இதனால், நிலைகுலைந்த முதலை வசந்தியை விடுவித்தது. பின்னர், அவர்கள் இருவரும் குளத்திலிருந்து வெளியேறினர்.
  இதுதொடர்பாக ஒடிஸா ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, பலரும் அவரைப் பாராட்டினர்.
  டிக்கியின் செயல் குறித்து அவருடைய தந்தை அபய் தலாய் பெருமிதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'டிக்கி என்ற வார்த்தைக்கு சிறிய என்று பொருள். எனினும், அவளுடைய வீரச் செயலானது அவளை உயர்ந்தவளாக்கிவிட்டது' என்றார்.
  இந்நிலையில், டிக்கிக்கு வீரச் செயல்களுக்கான தேசிய விருதை வழங்க பரிந்துரை செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதர் மாலிக் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, கேந்திரபாராவில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
  டிக்கியின் வீரதீரச்செயல் குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அதையடுத்து, எனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பான்குவாலா சென்றேன்.
  அங்கு, டிக்கியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய பெயர் வீரதீரச் செயல்களுக்கான தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார் முரளிதர் மாலிக்.
  ஆண்டுதோறும், வீரதீரச் செயல்களுக்கான தேசிய விருது 6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட 25 சிறார்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai