சுடச்சுட

  

  வருத்தம் தெரிவித்தார் சிவசேனை எம்.பி.: விரைவில் விமானப் பயணத் தடை விலகும்?

  By DIN  |   Published on : 07th April 2017 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivasena mp

  ஏர்-இந்தியா விமான நிறுவன அதிகாரியை தாக்கிய சம்பவத்துக்காக சிவசேனைக் கட்சி எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் வியாழக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளார்.
  இதையடுத்து, விமானப் பயணம் மேற்கொள்ள ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஓரிரு நாள்களில் விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
  மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதியன்று புணேயிலிருந்து, தில்லி செல்வதற்காக ஏர்-இந்தியா விமானத்தில் ஏறியுள்ளார்.
  இந்தப் பயணத்துக்காக அவர் ஏற்கெனவே 'பிசினஸ்' வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விமான ஊழியர்கள் அவரை 'எகானமி' வகுப்பில் பயணம் செய்ய பணித்ததாகத் தெரிகிறது.
  இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது காலணியை எடுத்து விமான அதிகாரி ஒருவரை கெய்வாட் தாக்கினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணம் செய்ய உள்ளுர் விமான நிறுவனங்கள் தடை விதித்தன. இதனால், ரவீந்திர கெய்க்வாட் எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
  நாடாளுமன்றத்தில் அமளி: இந்நிலையில், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விமான நிறுவனங்கள் தடை விதித்ததைக் கண்டித்து, மக்களவையில் சிவசேனைக் கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
  கெய்க்வாட் விளக்கம்: இதனைத் தொடர்ந்து, அவை மீண்டும் கூடியபோது எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட அதிகாரி எனது சட்டையைப் பிடித்து இழுத்ததால்தான், அவரைத் தாக்கினேன். எனினும், இச்சம்பவத்துக்கு நான் வருத்தம் தெரிவிப்பேனே தவிர, மன்னிப்பு கோர மாட்டேன்' என்றார்.
  ஆலோசனைக் கூட்டம்: இதையடுத்து, நாடாளுமன்றம் நிறைவடைந்ததும் இந்த விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவிடம் அனந்த் கீதே உள்ளிட்ட சிவசேனை எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
  அப்போது, விமானத் துறை அமைச்சரிடம் ரவீந்திர கெய்க்வாட், தான் வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அளித்தார்.
  தடை நீங்குமா? இந்நிலையில், ரவீந்திர கெய்க்வாட் வருத்தம் தெரிவித்திருப்பதை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை ஓரிரு நாள்களில் நீங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  எனினும், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அமலில் இருப்பதாகவும், அந்தத் தடையை நீக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனவும் ஏர்-இந்தியா விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai