சுடச்சுட

  

  விவசாயக் கடன் தள்ளுபடி கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 07th April 2017 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  UrijitPatel

  விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேல் அறிவுறுத்தியுள்ளார்.
  உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் இவ்வாறு கருத்து கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  கடன் வாக்குறுதி வேண்டாம்: 2017-18- நிதியாண்டுக்கான முதல் நிதிக் கொள்கை நிர்ணயக்குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற உர்ஜித் படேல் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்பதுபோன்ற வாக்குறுதிகள் தவிர்க்கப்பட வேண்டும். இதனால், நியாயமாக வரி செலுத்துபவர்களின் பணத்தை, கடன் தள்ளுபடிக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்படும். கடன் தள்ளுபடி வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருமித்த கருத்து ஏற்படுவது மிகவும் அவசியம்.
  மற்றவர்களுக்கு சுமை: கடன்களைத் தள்ளுபடி செய்வதால் கடன் வழங்கும் முறையிலும், நடைமுறைகளிலும் சிக்கல் ஏற்படும். விவசாயக் கடன் தவிர பிற கடன்களைப் பெறுபவர்களிடம் இருந்து அதிக வட்டி வசூலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் ஒருவருடைய சுமையை மற்றொருவர் கூடுதலாக சுமக்க வேண்டிய நிலை உருவாகிறது என்றார் அவர்.
  முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் கடந்த மாதம் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
  தள்ளுபடி கேட்கக் காரணம்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால், விவசாயம் பொய்த்துப் போகிறது. இதனால், பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தேர்தலின்போது அரசியல் கட்சிகள், விவசாயக் கடன் தள்ளுபடி என்பதை முக்கிய வாக்குறுதியாக அளித்து வருகின்றன.
  அண்மையில் உத்தரப் பிரதேசத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர்.
  பாஜக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ரூ.36,359 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
  நிபுணர்கள் கருத்து: அதே நேரத்தில், கடன் தள்ளுபடி விஷயத்தில் வங்கிகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்களின் பார்வை வேறாக உள்ளது. விவசாயக் கடன்களை தொடர்ந்து தள்ளுபடி செய்வதால் வங்கிகளின் கடன் அளிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், விவசாயக் கடன் பெற்ற பலர், கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து கடனைத் திருப்பிச் செலுத்தாமல் காத்திருக்கும் நிலையும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
  'ரெப்போ ரேட்' மாற்றமில்லை: உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் நிதிக்கொள்கை நிர்ணயக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  அதன்படி, வங்கிகள் குறுகியகால அடிப்படையில் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறும் கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. அது 6.25 சதவீதமாகவே நீடிக்கிறது. அதே நேரத்தில், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசுப் பத்திரங்களின் பேரில் வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரும் உடனடி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  மூன்று முக்கியப் பிரச்னைகள்: 'எல் நினோ' விளைவால் (சர்வதேச பருவநிலை மாற்றம்) இந்தியாவில் பருவ மழையில் ஏற்படும் பாதிப்பு, இதனால் உணவுப் பொருள் பணவீக்கத்தில் ஏற்படும் தாக்கம்; சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துதல்; 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்படும் பணவீக்க விளைவு உள்ளிட்ட 3 முக்கியப் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் குறுகிய காலத்துக்கு விலைவாசி அதிகரிக்கும் என்று ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.
  நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைக்க, தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  வளர்ச்சி அதிகரிக்கும்: நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது.
  சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகியவற்றிலும் மாற்றங்கள் இருக்கும் என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai