சுடச்சுட

  

  ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிபிஐ வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 07th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hooda

  ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
  நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிலம் ஒதுக்கியதில் குற்றச்சதியில் ஈடுபட்டதாகவும், ஏமாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் விசாரணைக்கு உள்ளாவார்கள் என்று தெரிகிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையும், அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனமும் ஜவாஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டதாகும்.
  முன்னதாக இந்த விவகாரம் குறித்து மாநில ஊழல் கண்காணிப்புத் துறையினர் ஹரியாணா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தது. இப்போது விதிகளின்படி இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது.
  இது தொடர்பாக சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சிபிஐ-யின் விசாரணை அடிப்படையில் மேலும் சிலரது பெயர்கள் சேர்க்கப்படலாம் என்றும், வேறு சில பெயர்கள் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
  முன்னதாக, கடந்த 1982-ஆம் ஆண்டில் ஹரியாணாவின் பஞ்ச்குலா பகுதியில் அசோசியேட் ஜேர்னல்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டு வரை அங்கு கட்டடம் எதுவும் கட்டப்படவில்லை. இதையடுத்து, ஹரியாணா நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அந்த நிலத்தைத் திரும்பப் பெற்றது. எனினும், 1995, 1996-ஆம் ஆண்டுகளில் அந்த நிலத்தைக் திரும்பக்கேட்டு அசோசியேடட் ஜெர்னல்ஸ் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  எனினும், பின்னர் 2005-ஆம் ஆண்டில் ஹரியாணா நகர்ப்புற மேம்பாட்டுத் துறை தலைவராக இருந்த ஹூடா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை மீண்டும் அசோசியேடட் ஜேர்னல்ஸ் நிறுவனத்துக்கு அளித்தார் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.
  ஹரியாணாவில் 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்த முறைகேடு தொடர்பாக அந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
  இந்த முறைகேட்டில் உயர் நிலையில் உள்ள தலைவர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாலும், அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு மாநிலங்களில் அலுவலகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஹரியாணா மாநில அரசு பரிந்துரைத்தது. அதன்படி இப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai