சுடச்சுட

    

    அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: சிறை செல்லத் தயார்: உமா பாரதி

    By DIN  |   Published on : 08th April 2017 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    umabharti

    அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்காக சிறை செல்லவும் தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய நீர் வளத்துறை அமைச்சருமான உமா பாரதி தெரிவித்தார்.
    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உமா பாரதி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    ராமர் கோயில் என்பது எனக்கு நம்பிக்கை தொடர்பான விவகாரம் ஆகும். அதன்மீது மிகப்பெரிய பக்தி வைத்துள்ளேன். அதற்காக நான் சிறை செல்ல வேண்டும் எனில், சிறை செல்வேன். நான் தூக்கிட்டுக் கொள்ள வேண்டுமென்றாலும், தூக்கிட்டுக் கொள்வேன்.
    யோகி ஆதித்யநாத்துடனான சந்திப்பின்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து பேசினீர்களா? என கேட்கிறீர்கள். ராமர் கோயில் குறித்து நாங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்துக்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்கு, யோகியின் குரு அவைத்நாத்தான் தலைவராக இருந்தார்.
    அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. ஆதலால், இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு நான் கருத்து தெரிவிக்க இயலாது. அதேநேரத்தில், இந்த விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியே சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றார் உமா பாரதி.
    அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai