சுடச்சுட

  

  உ.பி.யில் மதமாற்றப் புகார்: தேவாலய நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்

  By DIN  |   Published on : 08th April 2017 11:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றில் மத மாற்றம் நடைபெற இருப்பதாக வந்தப் புகாரை அடுத்து, அந்தத் தேவாலய நிகழ்ச்சியை போலீஸார் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
  உத்தரப் பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் நகரில் கிறிஸ்த தேவாலயம் ஒன்றில் ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்ய இருப்பதாக, ஹிந்து யுவ வாஹினி அமைப்பினர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த அமைப்பு, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 2002-ஆம் ஆண்டு உருவாக்கிய இளைஞர் அமைப்பாகும்.
  இந்நிலையில், அந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் 10 அமெரிக்கர்கள் உள்பட 150 பேர் சனிக்கிழமை கூடியிருந்தனர். ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரின் புகாரை அடுத்து, தேவாலயத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
  இதுதொடர்பாக, காவல் நிலைய அதிகாரி ஆனந்த் குமார் குப்தா கூறியதாவது:
  இந்தத் தேவாலயத்தில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை வெளிநாட்டினரும் பங்கேற்றதால், மத மாற்றம் நடைபெறுவதாக ஹிந்து யுவ வாஹினி அமைப்பினருக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வருகிறோம். ஹிந்து யுவ அமைப்பினரின் புகாரில் உண்மையிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
  அதையடுத்து, அமெரிக்கர்களின் பயண ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவர்களை போலீஸார் விடுவித்தனர்.
  தேவாலயம் முற்றுகை: முன்னதாக, அந்த தேவாலயத்தை ஹிந்து யுவ வாஹினி அமைப்பினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது, ""அப்பாவி ஹிந்துக்களுக்கு பணம் கொடுத்து கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யவே அங்கு வெளிநாட்டினர் வந்துள்ளனர்'' என்று அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, கலைந்துபோகச் செய்தனர்.
  பாதிரியார் மறுப்பு: ஆனால், ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரின் குற்றச்சாட்டுகளை தேவாலயப் பாதிரியார் மறுத்துள்ளார். மக்கள் தாமாக முன்வந்து பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கேற்பதாக அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai