சுடச்சுட

  
  supreme_court

  காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் வேண்டும் என்று கடந்த செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  சம்பா சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தினமும் விநாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. பின்னர், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலும் தினமும் விநாடிக்கு 2,000 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 18-இல் உத்தரவிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  அதில், 'மறுஆய்வு மனு தாக்கலுக்குப் பிறகு தற்போது நிலைமை மாறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி பிறப்பித்த உத்தரவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிட வேண்டும் என்பது விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடியாது என மத்திய அரசு மனு தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மறுஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, கர்நாடக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai