சுடச்சுட

    

    ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 3 ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
    ஜம்மு-காஷ்மீரில் தற்போது மிக மோசமான வானிலை நிலவி வருகிறது. ஒருபுறம் கனமழை பெய்து வரும் வேளையில், மறுபுறம் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. லடாக் மண்டலத்தின் படாலிக் செக்டார் பகுதியில் வியாழக்கிழமை பனிப்பொழிவின் தீவிரத்தால் பனிப்பாறைச் சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி பிரபு கிர்கே (43), பிஹாரி மராண்டி (34), குல்தீப் லக்ரா (22) ஆகிய மூன்று ராணுவ வீரர்கள் காணாமல் போய் விட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த மூன்று வீரர்களும் கார்கில் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
    இந்நிலையில், அந்த மூன்று வீரர்களின் உடல்களை ராணுவம் வெள்ளிக்கிழமை கண்டெடுத்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வீரர்களின் உடல்கள் 15 அடி பனிக்கட்டிகளின் கீழ் சிக்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கார்கில் மாவட்டத்தில் உள்ள காக்சார் பகுதியில் வெள்ளிக்கிழமையும் பனிச்சரிவுகள் ஏற்பட்டன. எனினும், அங்கு பணியில் இருந்த அனைத்து வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேற்கண்ட ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai