சுடச்சுட

  

  கேரள மாணவர் தற்கொலை: குடும்பத்தினர் மீது போலீஸார் பலப் பிரயோகம் செய்யவில்லை

  By DIN  |   Published on : 08th April 2017 11:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட தனியார் கல்லூரி மாணவரின் தாயார் மற்றும் உறவினர்கள் மீது போலீஸார் பலப் பிரயோகம் செய்யவில்லை என்று கேரள அரசு விளக்கமளித்துள்ளது.
  இதுகுறித்து முன்னணி நாளிதழ்களில் கேரள அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  தனியார் கல்லூரி மாணவர் ஜிஷ்ணு பிரணாய் (18) தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, காவல்துறை பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணையை நடத்தி வருகிறது.
  இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பிரச்னையாக்கி, சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
  திருவனந்தபுரத்திலுள்ள காவல்துறைத் தலைமையகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவர் ஜிஷ்ணுவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தினர் என்று சிலர் பொய்ப் பிரசாரம் மேறகொண்டு வருகின்றனர். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக ஊடகங்கள் கூறவும் இல்லை, அதுதொடர்பான காட்சிகள் வெளியிடப்படவும் இல்லை.
  இந்த வழக்கை, போலீஸார் தொடக்கத்திலிருந்தே மிகவும் கவனமுடன் விசாரித்து வருகின்றனர் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  எனினும், நடந்த உண்மைகள் அனைத்தும் இந்த விளம்பரத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக ஜிஷ்ணுவின் தாயார் மஹிஜா தெரிவித்துள்ளார்.
  திருச்சூர் மாவட்டத்திலுள்ள நேரு பொறியியல் கல்லூரி மாணவர் ஜிஷ்ணு பிரணாய், கடந்த ஜனவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  அவரது தற்கொலைக்கு சிலர் காரணமாக இருப்பதாகக் கூறி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மகனின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஜிஷ்ணுவின் தாயார் மஹிஜா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் திருவனந்தபுரத்திலுள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு கடந்த புதன்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
  எனினும், அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
  இதற்கிடையே, கோழிக்கோடு மாவட்டம், நடாபுரத்தில் கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஜிஷ்ணுவின் சகோதரி அவிஷ்னாவை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai