சுடச்சுட

  

  சிவசேனை எம்.பி. கெய்க்வாடுக்கு விமானப் பயணத் தடை நீக்கம்

  By DIN  |   Published on : 08th April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gaekwad

  ஏர்-இந்தியா விமானத்தில் சர்ச்சைக்குரிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை விலக்கிக் கொண்டுள்ளது.
  இதையடுத்து, மற்ற விமான நிறுவனங்களும் இந்தத் தடையை உடனடியாக விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி சிவசேனை எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட், ஏர்-இந்தியா விமான நிறுவன அதிகாரியை காலணியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  இதையடுத்து, ஏர்-இந்தியா உள்ளிட்ட மற்ற உள்ளூர் விமான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் விமானங்களில் பயணம் செய்ய ரவீந்திர கெய்க்வாடுக்கு தடை விதித்தன. இதனால், அவர் விமானங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. விமான நிறுவனங்களின் இந்தச் செயலைக் கண்டித்து மக்களவையில் சிவசேனை எம்.பி.க்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
  அப்போது மக்களவையில் பேசிய எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தமது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.
  மேலும், இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் பின்னர் கெய்க்வாட் எழுதினார். இதையடுத்து, கெய்க்வாட் மீது விதித்திருக்கும் தடையை நீக்குமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பினார்.
  இதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக, கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஏர்-இந்தியா விமானம் நீக்கியுள்ளது.
  ஏர்-இந்தியா ஊழியர் சங்கம் எதிர்ப்பு: அதேநேரத்தில், எம்.பி. ரவீந்திர கெய்க்வாடுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு ஏர்-இந்தியா ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  மேலும், ஏர்-இந்தியா ஊழியர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை ரவீந்திர கெய்க்வாட்டை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஏர்-இந்தியா நிர்வாக இயக்குநர் அஷ்வானி லோஹானிக்கு அந்தச் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai