சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீரில் கனமழை: ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு

  By DIN  |   Published on : 08th April 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பிரதான நதியான ஜீலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  ஜீலம் நதியின் வெள்ள அபாயக் குறியீட்டை நீர்மட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஜம்மு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், ஜம்மு, மத்திய காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  கனமழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கியப் பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, நோயாளிகள், முதியோர் உள்ளிட்டோர் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  வெள்ள எச்சரிக்கை: இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஜம்முவில் பாயும் பெரிய நதியான ஜீலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ஜீலம் நதியின் வெள்ள எச்சரிக்கை குறியீட்டை ஆற்றின் நீர்மட்டம் நெருங்கி வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
  இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். வெள்ளம் ஏற்படும்பட்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப் பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
  இதனிடையே, பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 17 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
  முதல்வர் ஆலோசனை: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அந்த மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மெகபூபா உத்தரவிட்டார்.
  விவரம் கேட்டறிந்தார் பிரதமர்: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து முதல்வர் மெகபூபா முஃப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மோடி உறுதியளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai