சுடச்சுட

  

  சரக்கு-சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) முழுமையற்றது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
  தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் இது தொடர்பாக கூறியதாவது:
  ஜிஎஸ்டி மசோதாவைக் கொண்டு வந்தால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், சாமானிய மக்கள் என அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சி முதலில் அதனை வடிவமைத்தது. ஆனால், இப்போது பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதா முழுமையற்றதாக உள்ளது.
  இது தொழிலதிபர்கள், விவசாயிகள், நுகர்வோர் என அனைத்துத் தரப்பு மக்களின் நன்மைக்கும் எதிரானது. 'ஒரே சந்தை, ஒரே வரி விதிப்பு முறை' என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருந்தது. ஆனால், ஜிஎஸ்டி குறித்த எங்கள் கனவு கைகூடவில்லை.
  ஜிஎஸ்டி-யில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்கு வரி விதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதிகபட்ச ஜிஎஸ்டி-யுடன் பல்வேறு கூடுதல் வரிகளைச் சேர்க்கும்போது ஒட்டுமொத்தமாக 55 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
  பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதும் காங்கிரஸ் ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி-யின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போதைய ஜிஎஸ்டி-யில் உள்ள அதிக வரி விகிதத்தால் பணவீக்கம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பு இல்லை.
  ஜிஎஸ்டி-யை பண மசோதாவாக நிறைவேற்றியுள்ளதால் அதில் மாற்றங்களையும் கொண்டுவர முடியாது. மாநிலங்களவைக்கு அதற்கான அதிகாரமும் இல்லை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai