'ஜோக்கர்' திரைப்படத்துக்கு தேசிய விருது: 7-ஆவது முறையாக விருது வென்றார் வைரமுத்து

தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்வாகியுள்ளது.
'ஜோக்கர்' திரைப்படத்துக்கு தேசிய விருது: 7-ஆவது முறையாக விருது வென்றார் வைரமுத்து

* சிறந்த நடிகர் அக்ஷய் குமார்

* சிறந்த நடிகை சுரபி லட்சுமி

* 7-ஆவது முறையாக விருது வென்றார் வைரமுத்து


* சிறந்த ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு
 தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்வாகியுள்ளது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று சிறந்த திரைப்படத் திறனாய்வாளராக தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது அவர் பெறும் இரண்டாவது தேசிய விருதாகும். மொத்தமாக இம்முறை தமிழகத்துக்கு 6 தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன.
இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர்.
அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வாகியுள்ளது.
அக்ஷய் குமாருக்கு விருது:

சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்துள்ளது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளார்.


பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. ஆட்சியாளர்களின் சுயலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து விமர்சித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை எழுத்தாளர் ராஜூ முருகன் இயக்கியிருந்தார். சமூகப் பிரச்னைகளை மையமாக் கொண்ட இப்படம் வெளியானபோதே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வைரமுத்துவைப் பொருத்தவரை சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று' என்ற பாடலை எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருது கிடைத்துள்ளது.


இதைத் தவிர, விக்ரம்குமார் இயக்கத்தில் வெளியான '24' திரைப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு என்கிற திரு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்படத்தின் நேர்த்தியான காட்சியமைப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
அதேபோன்று சிறந்த கலை இயக்கத்துக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்துள்ளது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று கலை இயக்குநர்கள் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.


பிராந்திய மொழி பிரிவில் சிறந்த ஹிந்தி திரைப்படமாக 'நீரஜா' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சமூக நோக்கத்துடன் கூடிய சிறந்த படத்துக்கான விருது அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்துக்குக் கிடைத்துள்ளது.


இதைத் தவிர, 'புலி முருகன்' உள்ளிட்ட 4 படங்களில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகை விருது ஜைரா வாஸிமுக்கு (தங்கல்) கிடைத்துள்ளது. தேசியத் திரைப்பட விருது வரலாற்றில் சண்டைக் கலைஞர்களுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இம்முறை சிறந்த சண்டைக் கலைஞருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. 'புலிமுருகன்' திரைப்படத்துக்காக பீட்டர் ஹெய்னுக்கு அந்த விருது கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com