சுடச்சுட

  

  தமிழக ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை: மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் தகவல்

  By DIN  |   Published on : 08th April 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் எடுத்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜென் கோஹைன் தெரிவித்தார்.
  இது தொடர்பாக அதிமுக உறுப்பினர் ஏ.விஜயகுமார் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ராஜென் கோஹைன் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்:
  தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர், பெங்களூரூ - சத்தியமங்கலம், மதுரை - தூத்துக்குடி ஆகிய ஏழு புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணிக்காக தமிழகத்திற்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ.187.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அகலப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.426.51 கோடியும், இரட்டை அகலப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.546.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
  ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, சிறப்பு நிறுவனத்தை ஏற்படுத்தித் திட்டங்களை முடிப்பது, எல்ஐசி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ரயில்வே திட்டங்களுக்கான நிலத்தை கையப்படுத்துவது, பாதுகாப்பு விஷயங்கள், வனத் துறை அனுமதி ஆகியவற்றுக்காக அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
  இலங்கைத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் குடியிருப்புகள்: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பாக ஏ.விஜயகுமார் எம்.பி. எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம் வருமாறு:
  இலங்கையில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2009, மே மாதம் முடிவுற்ற போருக்குப் பிறகு
  இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்து வாழும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விரிவான மனிதாபிமான நிவாரண முயற்சிகளை இந்திய அரசு தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுப் பணிக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்ட மொத்தம் ரூ.1,372 கோடி நிதி வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் குடியிருப்புகள் ஏறக்குறைய கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  சில குடியிருப்புகள் மட்டும் இறுதிக் கட்டுமானத்தில் உள்ளன. மேலும், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, மருத்துவமனைகளுக்கு மருத்துவக் கருவிகள் வழங்குதல், உள்ளூர் பொருளாதாரத்தை புதுப்பிப்பது, வாழ்வாதாரத்தை உருவாக்குவது உள்பட பல்வேறு திட்டப் பணிகளும் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai