சுடச்சுட

  

  தென் மாநிலத்தவர் குறித்த கருத்து: சர்ச்சையில் சிக்கினார் தருண் விஜய்

  By DIN  |   Published on : 08th April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tarun-vijay

  இனவெறி குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது தென் மாநிலத்தவர் குறித்து பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்துக்காக தருண் விஜய் வருத்தம் தெரிவித்தார்.
  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தருண் விஜய், ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் இனவெறி குற்றச்சாட்டை மறுத்தார். அப்போது அவர் பேசியதாவது:
  உங்களுக்கேத் தெரியும். தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கருப்பர்கள் உள்ளனர். நாங்கள் இனவாதிகளாக இருந்திருக்கும்பட்சத்தில், அவர்களுடன் எப்படி ஒன்றாக வாழ்வோம்? நமது நாட்டில் கருப்பர்கள் உள்ளனர். கருப்பர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர்.
  குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஆப்பிரிக்க நாட்டு மக்களின் மூதாதையர்கள் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மக்களும், கிருஷ்ணர் போன்ற கருப்பு நிறக் கடவுளர்களை வழிபாடு செய்து வருகின்றனர் என்று தருண் விஜய் கூறினார்.
  அவரது இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களிலும் தருண் விஜய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து தனது கருத்துக்கு தருண் விஜய் வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  நாம் இனவெறியை எதிர்த்து போராடியிருக்கிறோம். நமது நாட்டில் பல்வேறு நிறம், கலாசாரத்தைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். எனினும், இனவெறி என்பது எப்போதும் இங்கு இருந்ததில்லை. உண்மையில் நான் தெரிவிக்க விரும்பிய கருத்துகள் இவைகள்தாம். இதற்கு எனக்கு போதிய வார்த்தைகள் கிடைக்கவில்லை.
  நான் என்ன தெரிவிக்க விரும்பினேனோ, அதை தெரிவிப்பதற்கு போதிய வார்த்தைகள் கிடைக்கவில்லை. எனது கருத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  தென் இந்திய மக்களை நான் ஒருபோதும் கருப்பர்கள் என்று தெரிவிக்கவில்லை. எனது சொந்த கலாசாரத்தை, எனது நாட்டு மக்களை, எனது நாட்டை நான் எப்படி பரிகசித்துப் பேசுவேன்? அதற்குப் பதிலாக நான் எனது உயிரை துறப்பேன் என்று அந்தப் பதிவுகளில் தருண் விஜய் கூறியுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai