சுடச்சுட

  

  தோனி விவகாரம்: ஆதார் விவரங்கள் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

  By DIN  |   Published on : 08th April 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியான விவகாரத்தை அடுத்து, ஆதார் விவரங்களை சேகரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியப் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் இணையதளங்களில் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதார் விவரங்களின் ரகசியத் தன்மை குறித்தும் கேள்வியெழுந்தது.
  இதுதொடர்பான விசாரணையில், தோனியின் ஆதார் விவரங்களை சேகரித்த ஊழியர், அந்த விவரங்கள் அடங்கிய தாளுடன் சுயபடம் எடுத்துக் கொண்டதும், பின்னர் அதனை முகநூலில் பதிவிட்டிருப்பதும் தெரியவந்தது.
  இதனை வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் சிலர், தோனியின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் கசியவிட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது யு.ஐ.டி.ஏ.ஐ. கடும் நடவடிக்கை எடுத்தது.
  கட்டுப்பாடுகள் விதிப்பு: இந்நிலையில், ஆதார் விவரங்களை சேகரிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக யுஐடிஏஐ தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  ஆதார் விவரங்களை சேகரிப்பது என்பது மிகவும் பொறுப்பான பணி என்பதுடன் ரகசியம் காக்க வேண்டிய பணியாகும். இந்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ள வேண்டும். பிரபலமானவர்களின் ஆதார் விவரங்களை சேகரிக்கும்போது அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
  அதேபோல், தாங்கள் சேகரிக்கும் நபர்களின் ஆதார் விவரங்கள் எந்த வகையிலும் வெளியிடக் கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தோனி விவகாரத்தைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட ஊழியரின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai