சுடச்சுட

  

  சர்ச்சைக்குரிய நில மசோதா தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
  நிலம் கையகப்படுத்தப்படும்போது நியாயமான விலை வழங்குவது, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியவை தொடர்பான நில (இரண்டாவது திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
  எனினும், இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. பின்னர், அம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. குழுவின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த கணேஷ் சிங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  இதைத் தொடர்ந்து, இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு இதுவரை 8 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜ்ய நேரத்தின்போது கணேஷ் சிங் எழுந்து, நில மசோதா தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மேலும் கால நீட்டிப்பு கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
  பின்னர், இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai