சுடச்சுட

    

    பசுப் பாதுகாப்பு குழுவினருக்கு தடைகோரி மனு: ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 08th April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுப் பாதுகாப்பு குழுவினருக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் திஸன் எஸ். பூனாவல்லா என்பவர் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில், பசுப் பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அந்த அமைப்பினருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவை அரசமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதாடும்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு குழுவினர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, உண்மை நிலவரம் இதை விட மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு குறித்து 3 வாரங்களில் விளக்கம் கேட்டு, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: இதனிடையே, ராஜஸ்தானில் பசுப் பாதுகாப்பு குழுவினர் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அந்த மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai