சுடச்சுட

  

  விவசாயக் கடன் விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பாஜக விவசாயிகள் அணி கண்டனம்

  By DIN  |   Published on : 08th April 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று வலியுறுத்திய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலுக்கு பாஜக விவசாயிகள் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  அப்பிரிவின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான வீரேந்திர சிங், தில்லியில் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக கூறியதாவது: வங்கிகள் அனைத்தும் இப்போது மனிதத்தன்மையை மறந்து லாப நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளன. வங்கிகளின் கணக்குகளை எடுத்துப் பார்த்தால் அதில் கடன் பெற்ற விவசாயிகளில் 95 சதவீதம் பேர் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியிருப்பது தெரியவரும்.
  உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது மகாராஷ்டிரம் அல்லது தமிழகம் என வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் வறட்சியால் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதே நேரத்தில் விவசாயக் கடன்களை மாநில அரசுகள்தான் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு இதில் மாநிலங்களுக்கு உதவ முடியாது.
  கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தாற்காலிகமான தீர்வுதான். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்றார் அவர்.
  உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாயக் கடனை அந்த மாநில அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. ஆனால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai