சுடச்சுட

  

  20 வயது இளைஞருக்கு 40 வயது நோயாளியின் "இதயம்' தானம்

  By புதுதில்லி  |   Published on : 08th April 2017 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  doc

  மூளைச் சாவுக்கு உள்ளான சண்டீகரைச் சேர்ந்த 45 வயது நோயாளியின் இதயம், தில்லியில் இதய தசை நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞருக்கு இதயமாற்று அறுவைச் சிகிச்சை முறையில் பொருத்தப்பட்டது.

  சண்டீகரில் இருந்து தில்லிக்கு விமானத்தில் எடுத்து வரப்பட்ட அந்த இதயம், விமான நிலையத்தில் இருந்து 17.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரத்யேக ஏற்பாடுகளால் 27 நிமிடங்களுக்குள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது.

  இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயப் பிரிவு மையத்தின் தலைவரும், டீனுமான டாக்டர் பல்ராம் அய்ரன் கூறியதாவது:
  மூளையில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட 45 வயது நோயாளியின் இதயத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருப்பதாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனம் மூலம் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தன்று இரவு ஒரு மருத்துவக் குழு சண்டீகருக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. மூளைப் பாதிப்பால் இறந்த நோயாளியின் இதயத்தை எடுத்துக் கொண்டு, தில்லிக்கு காலையில் அக்குழுவினர் விமானத்தில் திரும்பினர்.

  பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதயத் தசை நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞருக்கு அந்த இதயம், மாற்று அறுவைச் சிகிச்சை முறை  மூலம் பொருத்தப்பட்டது என்றார் அவர்.

  இதுகுறித்து தில்லி காவல் துறையின் போக்குவரத்துத் துறை உயரதிகாரி கூறுகையில், "தில்லி விமான நிலையத்தின் டி-3 முனையத்தில் இருந்து 17.50 கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதயத்தை எடுத்து வர பசுமை வழித்தடம் அமைக்க ஏற்பாடு செய்தோம். இதையடுத்து, இதயம் காலை 8.50 மணிக்கு விமான நிலையத்தின் டி-3 முனையப் பகுதியில் இருந்து வாகனத்தில் பயணிக்கத் தொடங்கி காலை 9.17 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்தடைந்தது' என்றார்.

  இதேபோன்று, சண்டீகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மற்றொரு உடல் உறுப்பு தில்லி விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர், பிற்பகலில் 1.05 மணிக்கு விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்து வாகனம் மூலம் பத்திரமாக தெற்கு தில்லியில் உள்ள ஓக்லா பகுதி எஸ்கார்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  இதற்காக 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு பசுமை வழித்தடத்தை போலீஸார் ஏற்படுத்தினர். சுமார் 18 நிமிடங்களில் அந்த உறுப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

  இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ரத்தம் வழிந்த குழந்தை சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் வி.ஐ.பி. வாகனப் போக்குவரத்துக்காக வழியிலேயே நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், உறுப்பு தானத்திற்காக இரு பசுமை வழித்தடங்கள் தில்லியில் ஏற்படுத்தப்பட்டு உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai