சுடச்சுட

  

  3 ஆண்டுகளில் ரூ.1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: மத்திய வருவாய்த் துறை தகவல்

  By DIN  |   Published on : 08th April 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.37 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக அத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  நாடு முழுவதும் வருவாய்த் துறை 23,064 அதிரடிச் சோதனைகளை நடத்தியது. அவற்றில் 17,525 சோதனைகளை வருமான வரித்துறை மேற்கொண்டது. மற்ற சோதனைகளை சுங்கத்துறை நடத்தியது. இந்தச் சோதனைகளின்போது கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2013-14 முதல் 2015-16 வரை) ரூ.1.37 லட்சம் கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
  இதில் வருமான வரி ஏய்ப்பு ரூ.69,434 கோடியாகும். சுங்கம், கலால் மற்றும் சேவை வரி ஏய்ப்பு முறையே ரூ.11,405 கோடி, ரூ.13,952 கோடி, ரூ.42,727 கோடி ஆகும். மேலும், 2,814 வரி ஏய்ப்பு வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,966 வருமான வரி வழக்குகளாகும். இது தொடர்பாக 3,893 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுங்க வரி ஏய்ப்புக்காக அதிக அளவில் 3,782 பேரும், மத்திய கலால் வரி ஏய்ப்புக்காக 47 பேரும், சேவை வரி ஏய்ப்புக்காக 64 பேரும் கைதாயினர்.
  கடந்த மூன்று நிதியாண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய புலனாய்வுகளின் மூலம் 1,155 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.
  செயல்படாத மற்றும் போலி நிறுவனங்களின் பெயர்களை, நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம் 1 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai