சுடச்சுட

  

  ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா? தலைமைத் தேர்தல் ஆணையம் நாளை முடிவு

  By DIN  |   Published on : 09th April 2017 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election1

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களைக் கவர்வதற்குப் பெருமளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக வரும் புகார்களைத் தொடர்ந்து அத்தேர்தலை ரத்து செய்வதா அல்லது தள்ளிவைப்பதா என்பது குறித்து திங்கள்கிழமை (ஏப்ரல் 10) தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுள்ளது.
  இது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைய செலவினங்கள் பிரிவு இயக்குநர் விக்ரம் பாத்ரா ஆகியோரிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
  கடந்த மூன்று தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த விக்ரம் பாத்ரா, தில்லிக்கு சனிக்கிழமை வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திங்கள்கிழமை சென்னைக்குச் சென்று தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பார். 
  இதற்கிடையே, தமிழகத்தில் ஆளும் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் தேர்தல் ஆணைய அனுமதியுடன் மத்திய வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
  இந்நிலையில், வருமான வரித் துறை கைப்பற்றியதாகக் கூறப்படும் சில ஆவண நகல்களில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதற்காக யாருக்கு எந்தெந்த வார்டு, வட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு எவ்வளவு பணம் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகத் தெரிகிறது. இது பற்றி விவரம் செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின. இந்த ஆவணங்கள் வருமான வரித் துறையிடம் இருந்து எவ்வாறு ஊடகங்களிடம் கசிந்தன என்பது குறித்து அத்துறை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  இந்தப் பின்னணியில் கடந்த 48 மணி நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் நடத்தை விதிமீறல் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை, பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் உள்ளிட்ட இதர விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு ராஜேஷ் லக்கானி, விக்ரம் பாத்ரா ஆகியோருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்த அதிகாரிகள் தங்கள் அறிக்கையை சனிக்கிழமை இரவு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளனர். மேலும், விக்ரம் பாத்ரா ஞாயிற்றுக்கிழமை நேரடியாகவும் ஆணையத்திடம் அறிக்கையை தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. 
  இதையடுத்து, வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) தலைமைத் தேர்தல்ஆணையர் நஜிம் ஜைதி தலைமையில் இரு ஆணையர்கள் கூடி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் விதி மீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விவாதிக்கவுள்ளனர். அப்போது ராஜேஷ் லக்கானி, விக்ரம் பாத்ரா அளிக்கும் அறிக்கைகளையும் கவனத்தில் கொள்வர் எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வதா, தள்ளிவைப்பதா அல்லது திட்டமிட்டபடி ஏப்ரல் 12-இல் நடத்துவதா என்பது குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai