சுடச்சுட

  
  PTI4_8_2017

  இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவையை தில்லியில் கூட்டாக இணைந்து தொடங்கி வைத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

  இந்தியா-வங்கதேசம் இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, அணுமின் உற்பத்தி ஒத்துழைப்பு உள்பட 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானை (ஷேக் ஹசீனாவின் தந்தை) கௌரவிக்கும் வகையில், தில்லியில் உள்ள முக்கிய சாலைக்கு அவரது பெயரிடுவது என்று அறிவிக்கப்பட்டது. அவரது "அன்ஃபினிஸ்ட் மெமோயர்ஸ்' நூலின் ஹிந்தி மொழியாக்கப் பதிப்பை பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் இணைந்து வெளியிட்டனர்.
  அதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு சுமார் ரூ.29 ஆயிரம் கோடி (4.5 பில்லியன் டாலர்) கடனுதவி வழங்கப்படுமென்றும், வங்கதேசம் ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.3,200 கோடி (500 மில்லியன் டாலர்) வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
  இருநாடுகளுக்கும் இடையேயான நட்புணர்வு, நமது நாட்டு மக்களுக்கும் வளர்ச்சியைத் தருவதுடன், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றில் இருந்து இரு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும். பயங்கரவாதம், தீவிரவாதத்தால், இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை. இப்பிராந்தியத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் உறுதியான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் ஷேக் ஹசீனா மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற ஷேக் ஹசீனா அரசின் கொள்கை, நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
  வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை வங்கதேசம் தொடர்ந்து கடைபிடிக்கும். இந்தியா-வங்கதேச எல்லையில் அமைதி, பாதுகாப்பு ஆகியவை நிலவுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் நாடு எடுக்கும் என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
  முன்னதாக, கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் குடும்பத்தினரை ஷேக் ஹசீனா கெüரவித்தார். அப்போது, வங்கதேச விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு பல்வேறு சலுகைகளை பிரதமர் மோடி அறிவித்தார்.
  பாகிஸ்தான் மீது சாடல்: அதைத் தொடர்ந்து மோடி பேசியபோது, ""தெற்காசியாவில் நமது நம்பிக்கைக்கு துரோகம் இழைந்து முதுகில் குத்தும் ஒரு நாட்டின் சுபாவமே, இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது'' என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.

  தீஸ்தா நதிநீர் பங்கீடு விவகாரத்துக்கு விரைவில் தீர்வு: மோடி உறுதி

  தீஸ்தா நதிநீர் பங்கீட்டு விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
  நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் தீஸ்தா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தீவிர எதிர்ப்பே காரணமாகும்.
  தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவுக்கும், வங்கதேசத்தின் குல்னா நகருக்கும் இடையே புதிய ரயில் சேவைக்கான சோதனை ஓட்டமும், பேருந்து சேவையும் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
  இந்தியா-வங்கதேசம் இடையேயான நல்லுறவுக்கு தீஸ்தா நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது முக்கியம். இதற்கு மம்தா பானர்ஜியும் ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்.
  தீஸ்தா நதிநீர் பங்கீடு விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும், தீர்வை கண்டறிய முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் பிரதமர் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai