சுடச்சுட

  
  sugarcane

  உத்தரப் பிரதேசத்தில் 21 கரும்பு ஆலைகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ. 1,100 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக, அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் 2010-2011 காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியிலிருந்தபோது 21 கரும்பு ஆலைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், ரூ. 1,100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கருதப்படுகிறது.
  இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கரும்பு வளர்ச்சித் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கரும்பு ஆலைகள் விற்பனை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
  கூட்டத்தில் முதல்வர் பேசியபோது, "பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும், அவ்வாறு தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டார்.
  மேலும், கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 23-ஆம் தேதிக்குள் தராவிடில் ஆலை நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார்.
  மேலும், செயலிழந்த நிலையிலுள்ள கரும்பு ஆலைகளை அடுத்த அரைவைப் பருவத்துக்குள் செயல்பட வைக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். 2015-16 அரைவைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் ரூ. 18,000 கோடி தரப்பட வேண்டும். இதில், சுமார் ரூ. 17,840 கோடி வழங்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai