சுடச்சுட

    

    காஷ்மீர் மாணவர்களால் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு: ஏபிவிபி அமைப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 09th April 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டி பாஜக சார்பிலான ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியதோடு, அங்கு நடைபெற்ற கால்பந்துப் போட்டிக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

    ஜம்முவில் 12 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர் அணிகளுக்கு இடையே கடந்த 3-ஆம் தேதி கால்பந்துப் போட்டி தொடங்கியது. அதற்கான தொடக்க விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஷேர்-ஏ-காஷ்மீர் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் அதற்கு மரியாதை செலுத்தாமல் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
    இந்நிலையில், ஜம்மு பல்கலைக்கழகம், ஷேர்-ஏ-காஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான கால்பந்து இறுதிப் போட்டி ஜம்மு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அப்போது, அந்த மைதானத்துக்குள் நுழைந்த ஏபிவிபி மாணவர் அமைப்பினர், தேசிய கீதத்தை காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் அவமதித்து விட்டதாகக் குற்றம்சாட்டினர். அவர்களைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதோடு, கால்பந்துப் போட்டிக்கும் இடையூறு ஏற்படுத்தினர். ஏபிவிபி அமைப்பினரின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    இந்த விவகாரம் குறித்து ஜம்மு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.டி.சர்மா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
    ஜம்முவில் 12 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்ற நாளன்று மாலைதான் தேசியகீதத்துக்கு அவமதிப்பு என்ற குற்றச்சாட்டு எங்களுக்கு கிடைத்தது. மேற்கண்ட விழாவில் 700 மாணவர்கள் பங்கேற்றனர்.
    என்னைப் பொருத்துவரை இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக நான் கருதவில்லை. எனினும், தேசிய கீதத்துக்கு யாரும் அவமரியாதை இழைப்பதை அனுமதிக்க மாட்டோம். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து கால்பந்துப் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் சில போட்டிகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai