சுடச்சுட

  

  காஷ்மீர்: வாக்குச்சாவடி மீது தாக்குதல்; துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

  By DIN  |   Published on : 09th April 2017 06:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srinagar

  ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் ஆனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஸ்ரீநகர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் வெடித்ததால் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

  ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹா வானி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான உயிரிழந்தனர். அதன் காரணமாக ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹமீத் கார்ரா, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

  இதையடுத்து இன்று காலை  7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கு பின்னர் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஹஃப்ரூ, கூரிப்போரா, டர்ட்போரா, ஹயாட்போரா ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிக்கு செல்லும் பொதுமக்கள் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

  இதற்கிடையில், கன்டேர்பால் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. அதை சீர்படுத்த வந்த மின்சாரத்துறை பணியாளர் மீது சில சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்கினர்.

  உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சுழல் நிலவியது. இதனால், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மதியம் வரை 5 சதவீதம் வாக்குகளே பதிவாகின.

  இந்நிலையில், பட்காம் மாவட்டத்தில் உள்ள பக்கேர்போரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீது நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

  இதற்கு கட்டுப்படாத வன்முறையாளர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் குறித்து, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai