சுடச்சுட

  

  பஞ்சாப்: விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உறுதிபூண்டுள்ளேன்: அமரீந்தர் சிங்

  By DIN  |   Published on : 09th April 2017 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AmarinderSingh

  பஞ்சாபில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உறுதிபூண்டிருப்பதாக அந்த மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
  சண்டீகரில் உள்ள ஜிர்காபூரில் டி-மார்ட் நிறுவனத்தின் கடையை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியதாவது: மாநிலத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் ஆதரவை பெறுவதில் நாங்கள் தோல்வியடைந்தாலும், விவசாயிகளை துன்பத்தில் ஆழ்த்தும் அவர்களது கடனில் இருந்து விடுவிக்க உறுதிபூண்டுள்ளோம்.
  தேர்தலின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் அரசு உறுதிபூண்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், பஞ்சாபில் போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவுகட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், சிறப்பு அதிரடிப் படையை மாநில அரசு அமைத்துள்ளது. அந்த படையின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்பீரித் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். விரைவில் போதைப் பொருள் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும்.
  பஞ்சாபில் முந்தைய சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் சுதந்திரமாக நடைபெற்றது. அதை கட்டுப்படுத்துவதற்கு எனது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் ஏராளமான சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன என்றார் அமரீந்தர் சிங்.
  உத்தரப் பிரதேசத்தில் புதிதாக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, அந்த மாநில விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பிற மாநிலத்திலும் இதே கோரிக்கை வலுத்து வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai