சுடச்சுட

  
  chidambaram

  பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மட்டும்தான் இந்தியர்களா? என்று பாஜக மூத்த தலைவர் தருண் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் ப. சிதம்பரம் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  கருப்பர்களோடு நாங்கள் வாழ்கிறோம் என்று தருண் விஜய் தெரிவித்துள்ளார். அவரிடம் ஒன்று கேட்கிறேன். நாங்கள் என்று அவர் தெரிவித்தது யாரை? பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மட்டும்தான் இந்தியர்கள் என்று அவர் நினைக்கிறாரா? என்று அந்த பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
  முன்னதாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தருண் விஜய், ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் இனவெறி குற்றச்சாட்டை மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கருப்பர்கள் உள்ளனர். 
  நாங்கள் இனவெறி பிடித்தவர்களாக இருந்திருக்கும்பட்சத்தில், அவர்களுடன் எப்படி ஒன்றாக வாழ்வோம்? இந்திய மக்களும், கிருஷ்ணர் போன்ற கருப்பு நிறக் கடவுளர்களை வழிபாடு செய்து வருகின்றனர்' என்றார்.
  அவரது இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் பாஜகவின் போக்கை தருண் விஜயின் கருத்து வெளிப்படுத்துகிறது' என்றார்.
  திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "தருண் விஜய்யின் கருத்து நகைச்சுவையாக இருக்கிறது; தென் மாநிலத்தவர் அனைவரும் கருப்பு நிறத்தவர் கிடையாது' என்றார். இதுபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் தருண் விஜயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தருண் விஜய் தனது கருத்துக்காக பின்னர் வருத்தம் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai