சுடச்சுட

  

  ராஜஸ்தான் இடைத்தேர்தல்: முதல் முறையாக ஒப்புகைச் சீட்டு அறிமுகம்

  By DIN  |   Published on : 09th April 2017 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் முதல் முறையாக ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, 231 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இந்தத் தேர்தலுக்காக, முதல் முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த இயந்திரத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று உதவி தேர்தல் அதிகாரி வினோத் பரீக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
  இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தில், ஒரு வாக்குப்பதிவு அலகும், ஒரு கட்டுப்பாட்டு அலகும், ஒரு ஒப்புகைச் சீட்டு அலகும் இடம்பெற்றிருக்கும். வாக்குப்பதிவு அலகில் வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்ததும், அவர் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்ற தகவல்கள் அடங்கிய சீட்டு, ஒப்புகைச் சீட்டு அலகில் தெரியும். 7 வினாடிகளுக்குப் பிறகு அந்தச் சீட்டு, மற்றொரு பெட்டிக்குள் விழுந்துவிடும்.
  வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு காட்டப்படுவதால், வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றார் அவர். தோல்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பி.எல்.குஷ்வாஹிக்கு கொலை வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. அதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
  இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை, வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai